குட்கா, புகையிலை பொருட்கள் மீதான தடை அகற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

குட்கா, புகையிலை பொருட்கள் மீதான தடை அகற்றப்படக்கூடாது என்றும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-01-26 18:40 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்து கடந்த 2018-ம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணைக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

அதிகாரம் உண்டு

சென்னை ஐகோர்ட்டில் இப்போது எத்தகைய வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதோ, அதேபோன்ற வழக்கு ஒன்றில் கடந்த 30-11-2021 அன்று தீர்ப்பளித்த தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி ராஜசேகர ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கூறியிருக்கிறது.

மெல்லும் பொருட்கள் அனைத்தும் உணவுப் பொருட்கள் தான் என்பதால் புகையிலையும் உணவுப் பொருள் தான் என்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்களோ, அதைவிட அதிகம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.

ஜெயலலிதாவுக்கு கடிதம்

புகையிலை காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுநலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ள குட்கா தடை சட்டத்தில் குறுக்கிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனித உயிர்களை காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள அறிவிக்கையில் குறைகாண கூடாது'' என்று தெலுங்கானா ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டும் இதேபோன்ற தீர்ப்பைத் தான் வழங்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்பட்டதற்கும் நான் தான் காரணம். 2011 முதல் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு குட்கா தடை செய்யப்பட வேண்டியதன் நோக்கத்தை வலியுறுத்தி தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியதன் பயனாகவே தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

அந்தத் தடை அகற்றப்படக் கூடாது. அதற்காக சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் குட்கா தடை செய்யப்பட காரணமான இரு சட்டங்களையும் இன்னும் கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்