19 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

19 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Update: 2023-04-08 21:11 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் மீன் சந்தையும், காய்கறி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக்கிரமிப்புகள் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சாலையோர கடைகளை அகற்றும்படி கூறினர். மேலும் கடைகளை அகற்ற 2 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

ஆனால் நேற்றும் சாலையோரத்தில் காய்கறி மற்றும் மீன் கடைகள் செயல்பட்டன. இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். அப்போது வியாபாரிகள் சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். எனவே அதை அகற்றுமாறு அதிகாரிகள் கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அதைத்தொடர்ந்து 19 கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களது கடைகளின் முன் ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். அதே சமயம் கடைகளுக்கு முன் போடப்பட்டிருந்த சீட்டுகளை அகற்ற கால அவகாசம் கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு சீட்டுகளை அப்புறப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் காய்கறி மற்றும் மீன் கடைகளை சாலையில் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்