மதநல்லிணக்கத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

மதநல்லிணக்கத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2023-02-27 18:45 GMT

தூத்துக்குடியில் நடந்த மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாட்டில், தமிழகத்தின் மதநல்லிணக்கத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கூறினார்.

மாநாடு

தூத்துக்குடியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இளைஞர் அணி மற்றும் திராவிட நட்பு கழகம் சார்பில் மதநல்லிணக்க சமூக ஒற்றுமை மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாநாட்டுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசினார்.

மதநல்லிணக்கம்

அப்போது, மத நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. இதில் யாரும் தலையிடக்கூடாது. தமிழகத்தில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவா்களும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக பழகி வருகிறோம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். இந்த மத நல்லிணக்கத்தை நாம் எந்தக்காலத்திலும் விட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள், சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும். தமிழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், மதநல்லிணகத்தை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் நம்முடைய பணிகள் அமைய வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாநாட்டில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் - அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மன்சூர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஹாஜா கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்