கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் வணிகம் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம் மூலம் ரூ.25 லட்சம் வரை மானியம் பெறலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிப்பு
கொரோனா தொற்று இந்திய பொருளாதாரத்திலும், அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் வேலைவாய்ப்பு பல மட்டங்களில் பாதிப்படைந்து உள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்த அரசு அறிவித்து உள்ளது.
ரூ.5 கோடி வரை நிதி
இத்திட்டம் கேர் 1 மற்றும் கேர் 2 என்ற 2 கூறுகளை உள்ளடக்கியது. கேர் 1 திட்டத்தின்படி 2020-21 மற்றும் 2021-22 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமோ தற்போது உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதே போன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன்திட்டம் மூலம் நிதி உதவிபெறலாம். இதில் திட்டமதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம்.
எந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவிகிதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். இந்த உதவி பெற பயனாளர் வயது 55 க்கு மிகாமலும், குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம் என்பதால் கடந்த 2 ஆண்டுகளில் வணிகம் பாதிப்படைந்த உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தானியங்கி பணிமனைகள், அழகு நிலையங்கள் போன்ற சேவைத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம். 2020-க்கு முன்னர் அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
கேர் 2 திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாடு அல்லது நவீன மயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட எந்திரங்களின் மதிப்பில் 25 சதவிகிதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 23.3.2020 க்கு பின்னர் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கு எந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு
கொரோனாவால் வணிகரீதியாக பாதிப்பு அடைந்த ஆர்வமும் தகுதியும் உடைய தொழில் முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.