பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்

தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-20 18:45 GMT

தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள்-வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான இளவரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் அமைப்பு செயலாளர்கள் சிவா.ராஜமாணிக்கம், கோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், பாஸ்கர், தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்

கூட்டத்தில், தமிழக அரசு மேட்டூர் அணை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து இவைகளை கணக்கில் கொள்ளாமல் முன்கூட்டியே தண்ணீரை திறந்து விட்டு அதனால் நீர் மேலாண்மை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் குளறுபடியான நீர் மேலாண்மை செயலை கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

வாக்குச்சாவடி மையம் வாரியாக

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் வாரியாக பூத் கமிட்டி அமைத்து, அதில் மகளிர் அணி, இளைஞர் இளம் பெண்கள் பாசறையினர் உள்ளிட்டோருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்