செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
படவேடு செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் அணையின் முதல் ஷட்டரை திறந்து விட்டனர். பின்னர் வெளியேறிய தண்ணீரில் மலர் தூவினர்.இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ், ராஜகணபதி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 48 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க 181.44 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி வரை திறக்கப்படுகிறது. எனவே செண்பகத்தோப்பு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்கு ஏரிகளில் நிரம்பும் என பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.