திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்

பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் அந்த பெண்ணின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-18 20:12 GMT

பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் அந்த பெண்ணின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டயம்பேட்டை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் செல்வநாதன். இவர் சொந்தமாக லாரி சர்வீஸ் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்ததம்பதிகள் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக புவனேஸ்வரி மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி தனது அறையில் தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் புவனேஸ்வரியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதை தொடர்ந்து நேற்று காலை புவனேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது புவனேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புவனேஸ்வரியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்.டி.ஓ. சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. விசாரணையும் தாமதமாக நடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவமனை போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ் துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர்கள் கென்னடி, ராஜூ, நிவேத லட்சுமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் துணை கமிஷனர் அன்பு கலெக்டரிடம் பேசி பிரேத பரிசோதனைக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்