பேராவூரணியில், உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில், உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-29 20:00 GMT

டாக்டர்களின் கவனக்குறைவால் பெண் இறந்ததாக கூறி பேராவூரணியில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அறுவை சிகிச்சை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். விவசாயி. இவரது மனைவி நீவிதா (வயது23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வது முறையாக கர்ப்பமடைந்த நீவிதா பிரசவத்திற்காக கடந்த 24-ந்தேதி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 26-ந்தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் நீவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். அப்போது நீவிதாவுக்கு திடீரென வலிப்பும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 28-ந்தேதி நீவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நீவிதா சகோதரர் நவீன்குமார் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் டாக்டர்களின் கவனக்குறைவால் நீவிதா இறந்ததாக கூறி நேற்று பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே அவரது உறவினர்கள் மற்றும் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்ட நீவிதாவின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்