டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

மினிலாரி மோதி 4 வயது சிறுமி பலியானாள். இந்த விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சிறுமியின் உடலையும் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-15 18:45 GMT

கருவேப்பிலங்குறிச்சி,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன்(வயது 35). இவருடைய மனைவி சிவசங்கரி(28). இவர்களது மகள் சம்யுக்தா(4). நேற்று முன்தினம் சிவசங்கரி தனது மகள் சம்யுக்தாவுடன் வண்ணாங்குடிகாடு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி மோதியதில் சிறுமி சம்யுக்தா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் உடல், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து சிறுமியின் உடல், நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே உறவினர்கள் வண்ணாங்குடிகாடு பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், விபத்துக்கு காரணமான மினி லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும், குழந்தையின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் உடலை எடுத்து வந்ததால்...

இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே சிறுமியின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை உறவினர்கள் எடுத்துக்கொண்டு, சாலை மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம், கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று உறவினர்கள், குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்