டாஸ்மாக் ஊழியர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-27 17:28 GMT

டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் சூப்பர்வைசர்

கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர் மேக்களூர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை திருவண்ணாமலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். சோமாசிபாடி அருகில் செல்லும் அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராஜேந்திரனுக்கும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை, அந்த வழியாக காரில் வந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.

உறவினர்கள் தகராறு

இதற்கிடையில் காரில் வந்தவர்களுக்கும், ராஜேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் ராஜேந்திரனின் உடலை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோதம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டு வந்து கொன்றுவிட்டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

உடலுடன் சாலை மறியல்

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் வந்தவர்களை அவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருத்துவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடுவில் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ராஜேந்திரனில் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வமாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்