உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பலியான ஊழியரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-10 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பலியான ஊழியரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

தக்கலை அருகே உள்ள வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது26). இவர் இரவிபுதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 6 மாதமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளிகோடு பகுதியில் டிரான்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார்.

இந்த சம்பவம் குறித்து ஏசுராஜனின் தாயார் கனகம் (59) கொடுத்த தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஏசுராஜனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது. இதையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். மேலும், அவர்கள் மின்வாரிய அதிகாரிகள் வந்து இழப்பீடு தொகை பெற்று தருவதாக உத்திரவாதம் அளித்தால் மட்டுமே உடலை கொண்டு செய்வோம் என கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏசுராஜனின் உறவினர்களுக்கு ஆதரவாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெல்லியன்டதாஸ் போலீசாரிடம் பேசினார். இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளை வரவழைத்து தக்கலை போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் துணை சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், மின்வாரி உதவி செயற்பொறியாளர் உஷா, உதவி பொறியாளர் கவிதா மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

உடன்பாடு ஏற்பட்டது

பேச்சுவார்த்தைக்கு பின் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் ஏசுராஜன் உயிரிழந்தது குறித்து போலீஸ் நிலையத்தில் பதியபட்ட வழக்கு சம்மந்தமாக மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டததை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 3 மணிநேரத்துக்கு பிறகு ஏசுராஜனின் உடலை போலீசார் ஒப்படைக்க வந்தபோது, அமரர் ஊர்தி வேறு இடத்திற்கு சென்று விட்டது. இதையடுத்து இரவு 7.45 மணிக்கு அமரர் ஊர்தி வந்தபின் உடலை உறவினர்கள் கொண்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்