தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சீரான குடிநீர் வினியோகம்:கலெக்டர் செந்தில்ராஜ்

எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-21 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்தார்.

புதிய வீடுகள் ஆய்வு

எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி மதிப்பில் புதிதாக 52 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இந்த முகாமுக்கு வந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிக்கும் மக்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் கால்நடைகள் வளர்ப்பதில் சிக்கல் உள்ளது. சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இப்பகுதி ஆற்று மணல்பாங்கான பகுதி என்பதால், இங்குள்ள கழிப்பறை செப்டிக் தொட்டியில் மண் சேர்ந்துவிடுவதால் 3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகளவு பணம் செலவழித்து சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் கழிப்பறைகளிலும், அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவாறு செய்து தர வேண்டும், என்றனர்.

சீரான குடிநீர்வினியோகம்

இதற்கு பதிலளித்து பேசியகலெக்டர், முகாமில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படும். குடிநீர் பிரச்சினை ஏற்படாதவாறு சீராக விநியோகம் செய்யப்படும். கால்நடைகள் வளர்ப்புக்கு குழுவாக வந்து மனு செய்தால், அதற்குரிய கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அலெக்ஸாண்டர், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்