பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற வங்கி கணக்கை பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை
பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், இதர வேளாண் பணிகளுக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2 ஆயிரம் வீதம் 12 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது விவசாயிகள் வருகிற டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையுள்ள காலத்திற்கான 13-வது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்வது கட்டாயமாகும். அதாவது மத்திய அரசு தற்போது பி.எம்.கிசான் திட்டநிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டுவந்துள்ளதால், வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதிவிடுவிப்பு செய்து வந்தநிலையில், இனிதிட்டநிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும்.
கவுரவ நிதி
எனவே விவசாயிகள் 13-வது தவணைத் தொகை (1.12.2022 முதல் 31.3.2023 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆதார் எண், வங்கிகணக்கு எண் இணைப்பு செய்திடாத விவசாயிகள் தொடர்ந்து பிரதம மந்திரியின் கவுரவநிதி திட்டத்தில் பயன்பெற இயலாது.
அதனால் பிரதம மந்திரியின் கவுரவநிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போனுடன் தொடர்பு கொண்டு வருகிற 30.11.2022-க்குள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண்களை இணைப்பு செய்து தொடர்ந்து பிரதம மந்திரியின் கவுரவநிதி திட்டத்தில் பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.