தண்ணீர் எடுத்துச் சென்ற குழாய்கள் அகற்றப்பட்ட விவகாரம்: விவசாயிகளுடன் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சுவார்த்தை

விவசாய நிலங்களுக்கு அனுமதியின்றி தண்ணீர் எடுத்துச் சென்ற குழாய்கள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விவசாயிகளிடம் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Update: 2022-09-29 16:37 GMT

அமைச்சர் பேச்சுவார்த்தை

சின்னமனூர் அருகே முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு அனுமதியின்றி குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அகற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விவசாயிகளின் இந்த பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் கோரிக்கை

சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிவை அறிந்து கொள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காத்திருந்தனர். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அமைச்சர் இ.பெரியசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.

இதில் பங்கேற்ற விவசாயிகள் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவில்லை. எங்கள் விவசாய நிலம் வளமான பகுதி. ஆனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சின்னமனூரில் தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றோம். தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகின்றன. மீண்டும் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்று மேல் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே விவசாய பயிர்களை காப்பாற்ற தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்