பணம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே பணம் ெகாடுக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கீழ செக்காரக்குடியை சேர்ந்தவர் காந்தியம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நேற்று அதிகாலையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் நெல்லையப்பன் (24), சங்கரநயினார் (22) ஆகிய 2 பேரும் காந்தியம்மாள் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். இதனால் காந்தியம்மாள் கதவை திறந்து வெளியில் வந்தார்.
அப்போது நெல்லையப்பன், சங்கரநயினார் இருவரும் காந்தியம்மாளிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.
கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் காந்தியம்மாளின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த காயம் அடைந்த காந்தியம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மகன் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து, நெல்லையப்பன், சங்கரநயினார் ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.