ஜாதக பொருத்தம் இல்லை என்று கூறி காதலியை திருமணம் செய்து தர மறுப்பு: ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

ஜாதக பொருத்தம் இல்லை என்று கூறி காதலியை திருமணம் செய்து தர மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலை நடுதொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராமராஜன்(வயது 26). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் போது இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இவா்களது காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பொருத்தம் இல்லை

இருப்பினும் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்த்து விட்டு திருமணம் குறித்து பேசலாம் என பெண்ணின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ராமராஜனின் ஜாதகத்தை வாங்கி பார்த்தபோது, ஜாதகத்தில் பொருத்தம் சரியாக இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ராமராஜனுக்கு திருமணம் செய்து வைக்க காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை மாந்தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராமராஜன் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராமராஜனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உருக்கமான கடிதம்

மேலும் அவரது சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஜாதகம் சரியில்லை என்று கூறி உன்னையும், என்னையும் பிரித்து விட்டனர். உனக்காக எவ்வளவோ செய்துள்ளேன். இனிமேல் உன்னுடன் சேர முடியாது என்பதால் நான் இறைவனிடம் சேர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்