விதிமுறைகளை பின்பற்றாத 64 பள்ளிக்கூட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு -கலெக்டர், அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிரடி

பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களில், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர், அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 64 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2023-05-25 20:42 GMT


பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களில், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர், அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 64 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பள்ளி வாகனங்கள் சோதனை

தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், 6 முதல் 12-ம் வகுப்புகள் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் திறக்கப்படுகிறது. இதுபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களில் அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதற்காக சோதனை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் சங்கீதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்ேபாது பஸ்சின் முகப்பில் கலெக்டர் ஸ்டிக்கர் ஒட்டினார்..

இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேலு, சித்ரா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தீயணைப்புபடை வீரர்கள், 108 ஆம்புலன்சு பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

64 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

இந்த ஆய்வின் போது, வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, படிக்கட்டுகள் சரியாக இருக்கிறதா, முதலுதவி பெட்டிகள் உள்ளதா? தீயணைப்பான்கள் செயல்படுகின்றனவா?, வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, அவசர வழி உள்ளதா, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டன.

முதல்நாளில், மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 502 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் 438 வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றாத 64 பள்ளிக்கூட வாகனங்களுக்கு அனுமதி சான்று மறுக்கப்பட்டது.

வரும் நாட்களிலும் இந்த ஆய்வுப்பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தற்போது அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள், குறைப்பாட்டை சரி செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் மீண்டும் காண்பித்து அதற்கான தகுதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்