`ஆங்கிலத்தில் சுற்றறிக்கை இருப்பதால்படிப்பதற்கு சிரமமாக உள்ளது'-செங்கோட்டை நகராட்சிகூட்டத்தில் உறுப்பினர் குற்றச்சாட்டு
`ஆங்கிலத்தில் சுற்றறிக்கை இருப்பதால் படிப்பதற்கு சிரமமாக உள்ளது'- என்று செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் குற்றம் சாட்டி பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகராட்சி அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிசாமி, பொறியியல் பிரிவு மேற்பார்வையாளா் காந்தி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 5-வது வார்டு உறுப்பினா் ஜெகன் பேசும்போது, நகர்மன்ற கூட்டம் குறித்த சுற்றறிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளதால் அதை படிப்பதும், பொருள் அறிவதும் உறுப்பினர்களுக்கு சிரமத்தை தருகிறது. எனவே மறு அஜண்டா வழங்க வேண்டும் அல்லது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், என்றார்.
அதனைதொடா்ந்து நகராட்சி தலைவா் மற்றும் ஆணையாளா் ஆகியோர், இனி இதுபோல் தவறு நடக்காது. அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் எளிதில் புரியும்படி தமிழில் மட்டுமே இருக்கும். மேலும் நாய்த்தொல்லையை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
8-வது வார்டு உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம் பேசும்போது, எனது வார்டு பகுதிகளில் இதுவரையில் எந்தவித பணிகளும் நடைபெற வில்லை. எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே எனது வார்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதேபோல் மற்ற உறுப்பினா்களும் தனது வார்டு பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.