ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவர் பிணமாக மீட்பு
கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் திபின்(வயது 23). இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு முடிந்ததால், சுற்றுலா செல்வதற்காக தனது உறவினர்களை அழைத்திருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் திபின் உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து ரசித்த அவர்கள் மாலையில் கோவளம் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அலையில் சிக்கினார்
அங்கு உற்சாகமாக திபின் உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை திபினை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
தங்களுடைய கண்முன்னே திபின் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என உறவினர்கள் வேதனையுடன் கதறி அழுதனர்.
மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த பகுதி மீனவர்களுடன் இணைந்து ராட்சத அலையில் சிக்கிய மாணவரை தீவிரமாக தேடினர். இரவும் தேடுதல் பணி நடந்தது. எனினும் திபினை மீட்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்களுடன் இணைந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 12 மணிக்கு கடலில் திபினின் உடல் பிணமாக மிதந்ததை போலீசார் கண்டனர். தொடர்ந்து மீனவர்களின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு நின்ற உறவினர்கள் திபினின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராட்சத அலையில் சிக்கிய மாணவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.