காளப்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.6 கோடி நிலம் மீட்பு
காளப்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.6 கோடி நிலம் மீட்கப்பட்டது.
காளப்பட்டி
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காளப்பட்டி டெக்பார்க் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கம்பிவேலி போடப்பட்டு இருந்தது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி குமார் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அத்துடன் பொக்லைன் எந்திரமும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
காளப்பட்டியில் அகற்றப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடிக்கும் மேல் இருக்கும். மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை பொதுமக்கள் மற்றும் தனிநபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. அப்படி ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எந்தப்பகுதியிலாவது மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம். அத்துடன் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.