ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு

துடியலூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-08-29 15:06 GMT

துடியலூர்

துடியலூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

மங்கையம்மன் கோவில்

கோவையை அடுத்த துடியலூர் டி.என்.பி நகரில் சுமார் 200 ஆண்டு பழமை வாய்ந்த மங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.

இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் கோவையில் இருந்து கணுவாய் செல்லும் ரோடு அப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் 3.80 ஏக்கர் மற்றும் 4.51 ஏக்கர் என மொத்தம் 8 ஏக்கர் 31 சென்ட் நிலம் உள்ளது.

நிலம் ஆக்கிரமிப்பு

அந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு துரைசாமி மனைவி நிர்மலா (வயது 70) எனபவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக குத்தகை தொகையை செலுத் தாமல் ஆக்கிரமித்து வைத்து இருந்ததாக தெரிகிறது.

மேலும் அவர், அந்த நிலம் எனக்கு தான் சொந்தம் என கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து அறநிலை துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றதில், அந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடம் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதிகாரிகள் மீட்டனர்

இதைத் தொடர்ந்து இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, மங்கையம்மன் கோவில் தக்கார் மற்றும் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் வடக்கு வட்ட இந்து அறநிலை ஆய்வாளர் சரண்யா, மேட்டுப்பாளையம் வட்ட ஆய்வாளர் ஹேமலதா மற்றும் வருவாய் துறையினர் போலீசாரின் உதவியுடன் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பில் இருந்த 8.31 ஏக்கர் கோவில் நிலத்தை அறநிலைதுறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் அந்த இடத்தை சுற்றி வேலி அமைத்து கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று பெயர்பலகை வைக்கப்பட்டது.

சந்தை மதிப்பு ரூ.50 கோடி

மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இது குறித்து மங்கையம்மன் கோவில் தக்கார் கனகராஜ் கூறுைகயில, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மங்கையம்மன் கோவில் திருவிழா மற்றும் திருப்பணிக்கு செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்