தமிழகம் முழுவதும் ரூ.4,250 கோடி மதிப்புள்ள இடங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருவண்ணாமலையில் மீட்கப்பட்ட கோவில் நிலம் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வடக்கு கோபுரம் பகுதியில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே, இடிக்கப்பட்ட அம்மனி அம்மன் மடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எ.வ.வேலு பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும், இங்கு 2 கோடி ரூபாய் செலவில் அம்மனி அம்மன் கோவில் கோபுரம் புதுப்பிக்கப்படும் எனவும், காலி இடம் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் 4,250 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு வேட்டை தொடரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.