ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி கோவில் சொத்துகள் மீட்பு; அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துகள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2023-04-30 23:54 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தமிழக முதல்- அமைச்சர் வழிகாட்டுதலோடு மீட்கப்பட்டு உள்ளது.

அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.4,250 கோடி மதிப்புள்ள சொத்துகள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளது. இந்த மீட்பு வேட்டை தொடரும்.

திருப்பதிக்கு நிகராக...

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் இடங்கள் இல்லாமல் பக்தர்கள் பயன்பாட்டிற்கும், கோவில்கள் வருமானங்களை ஈட்டுகின்ற நிலையை உருவாக்குகின்ற பணியில் இந்து சமய அறநிலைய துறை மேற்கொண்டு வருகிறது.

சுமார் ரூ.2 கோடி மதிப்பில் அம்மணி அம்மன் மடம் புதுப்பிக்கப்படுவதுடன் மீதமுள்ள காலியிடத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டுமோ அதை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோன்று 4 கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு என்று நேரம் ஒதுக்குவதற்கு சட்டமன்ற கூட்டத் தொடரில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் திருவண்ணாமலை கோவிலும் ஒன்றாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள்.

இதுகுறித்து சிறப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிசீலித்த பின்னர் விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்