தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மீட்பு

தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.

Update: 2022-08-12 15:19 GMT

தூத்துக்குடியில் ஆன்லைனில் மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

பணம் மோசடி

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் பழனிகுமார். இவருடைய மகளின் செல்போனுக்கு கடந்த 29.07.2022 அன்று பான் கார்டை அப்டேட் செய்யுமாறு ஒரு குறுஞ்செய்தி வந்து உள்ளது. அந்த லிங்கை திறந்து பயன்படுத்தி உள்ளார். சிறிது நேரத்தில் பழனிகுமாரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.49 ஆயிரத்து 990 எடுக்கபட்டதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது. சிறிது நேரத்தில் மீண்டும் ரூ.49 ஆயிரத்து 986 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது. இதனை தொடர்ந்து தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனிகுமார் சைபர் குற்றப்பிரிவு உதவி மைய எண் 1930 தொடர்பு கொண்டு தெரிவித்து உள்ளார்.

மீட்பு

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், சுதாகர் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக மேற்படி பழனிக்குமார் வங்கியில் இருந்து பணம் சென்ற வங்கியின் தலைமையிடத்திற்கு தொடர்பு கொண்டு மோசடி பணத்தை முடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் மோசடி பண பரிமாற்றம் நிறுத்தப்பட்டு, அந்த வங்கியில் இருந்து பழனிகுமாரின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் மீண்டும் வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்