கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை, ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அகரகடம்பனூர் ஊராட்சி, வடக்குவெளி கிராமத்தில் கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 17 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது.
கோவில் நிலம் மீட்பு
அதை தொடர்ந்து நேற்று நாகை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் தலைமையில், உதவி ஆணையர் ராணி முன்னிலையில், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அமுதா, செயல் அலுவலர் பூமிநாதன், ஆய்வாளர் கமலச்செல்வி மற்றும் கோவில் பணியாளர் ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட இடத்தில் எல்லை கற்கள் நடப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.