ரெயிலில் தவற விட்ட 12 பவுன் நகை மீட்பு
மயிலாடுதுறையில் ரெயிலில் தவற விட்ட 12 பவுன் நகை மீட்கப்பட்டது. அந்த நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் ரெயிலில் தவற விட்ட 12 பவுன் நகை மீட்கப்பட்டது. அந்த நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
கைப்பையை தவறவிட்டார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெரியாண்டவர் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மனைவி கமலா (வயது59). இவர் கோவில்பட்டியில் நடந்த கோவில் குடமுழுக்கு விழாவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு திரும்பினார்.
நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் தஞ்சை ரெயில் நிலையத்தில் குடும்பத்தினருடன் கமலா இறங்கினார். கீழே இறங்கிய பிறகு தான் அவர் கொண்டு வந்த கைப்பையை ரெயிலிலேயே தவற விட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அந்த ரெயில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டது.
ரெயில்வே பாதுகாப்பு படை
இதுகுறித்து கமலா உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த கைப்பையில் 12 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 600 பணம் இருந்ததாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் மற்றும் போலீசார் அதிகாலை 5.20 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்த ரெயிலில் இருந்து கைப்பையை மீட்டு ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பையை தவறவிட்ட கமலா தனது குடும்பத்தினருடன் வேறொரு ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்தார்.
கண்ணீர் மல்க நன்றி
அவரிடம் இன்ஸ்பெக்டர் சுதீர்குமார், கமலாவிடம் உரிய ஆதாரங்களை பெற்று உறுதி செய்து கொண்ட பின்னர் கைப்பையை ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட கமலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.