சவுதிஅரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள்
சவுதிஅரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள்
சவுதிஅரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள் என்று கலெக்டரிடம், பெண் கண்ணீருடன் புகார் அளித்தார். அவர் இறந்து 42 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.
குழந்தையுடன் வந்த பெண்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மனைவி கண்ணகி. இவர் தனது 4 வயது குழந்தையுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஜெயராஜ் கடந்த 2018-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டில் உள்ள தம்மம் பகுதியில் கட்டிட பணிக்காக சென்றார். இந்நிலையில் கடந்மாதம் 9-ந் தேதி எனக்கு சவுதிஅரேபியா நாட்டின் தூதரகத்தின் அதிகாரிகள் போன் செய்து, ஜெயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனது கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி 10-ந் தேதி புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
42 நாட்களுக்கு மேல் ஆகிறது
எனது கணவர் இறந்து 42 நாட்களுக்குமேல் ஆகிறது. ஆனால் உடல் இதுவரை வரவில்லை. எனவே கலெக்டர் சவுதிஅரேபியாவில் உள்ள எனது கணவரின் உடலை மீட்டுக்கொடுத்து இறுதி சடங்கு செய்ய உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனது கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி இந்திய தூதரகத்திடமும் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.