நீர்நிலை புறம்போக்கு நிலம் மீட்பு

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு வேலி அமைக்கும் பணியினை செய்தனர்.

Update: 2023-04-06 19:26 GMT

சிவகாசி, 

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு வேலி அமைக்கும் பணியினை செய்தனர்.

அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை மீட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தாசில்தார் லோகநாதன், நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தால் அதுகுறித்து உரிய தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சாட்சியாபுரம்

இதற்கிடையில் சிவகாசி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சாட்சியாபுரம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இதனை மீட்டு வேலி அமைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் காளிசரண், விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் அரிச்சந்திரன், நில அளவை பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் அங்குள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள இடத்தினை அளந்து சர்வே செய்தனர். இதில் 1 ஏக்கர் பரப்பளவு இடம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு

இந்த பகுதியை கையகப்படுத்தி வேலி அமைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் குடும்பத்துக்கு உரிய சுமார் 37 சென்ட் நிலம் இந்த பகுதியில் உள்ளதாகவும், இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்ல வசதியாக 12 அடி ரோடு உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அரசு ஆவணங்களையும், சம்பந்தப்பட்டவர்களின் பத்திரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு செய்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ள தாசில்தார் லோகநாதன் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்