தளி அருகே பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை சொகுசு காரில் வந்த 8 பேர் கும்பல் வெறிச்செயல்
தேன்கனிக்கோட்டை
தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை சொகுசு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த கொடூர கொலை பற்றிய விவரம் வருமாறு:-
ரியல் எஸ்டேட் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் கேசவன் (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். இவர் ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் மோட்டார்சைக்கிளில் வந்தார். தளி அருகே கே.மல்லசந்திரம் அருகில் அவர் சென்ற போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்தது. திடீரென்று அந்த காரை ஓட்டி வந்தவர், கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
ஓட, ஓட விரட்டி வெட்டியது
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கேசவனை ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கழுத்து என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது.
இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றது. இந்த கொலையை நேரில் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர்கள் இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
அதன்பேரில் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலையான கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை நடந்ததா? அல்லது பைனான்ஸ் தொழில் பிரச்சினையில் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட கேசவனின் செல்போன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் 'ஆசிட்' ஊற்றப்பட்டதால் உருகி போய் காணப்பட்டது. அந்த செல்போனையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றுள்ளனர். தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.