மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ரியல் எஸ்டேட் தரகர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ரியல் எஸ்டேட் தரகர் பரிதாபமாக பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஸ்டீல் பிளான்ட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் திருவாலங்காடு அடுத்த வியாசபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அரக்கோணம் -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைத்தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்தார்.
இதில், தலையில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவாலங்காடு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த வெங்கடேசனுக்கு ஷர்மிளா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.