நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டுமென குறைதீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-09-19 17:24 GMT

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டுமென குறைதீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 414 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

முதியோர் உதவித்தொகை

கூட்டத்தில், பள்ளிகொண்டா அருகே உள்ள சின்னகோவிந்தபாடியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த வீடு இல்லாத 36 பேருக்கு கடந்த ஜனவரி மாதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை உடனடியாக அளந்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் அளித்த மனுவில், தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் கேட்டதற்கு, 2 கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்கள். கணவரை இழந்து பிள்ளைகளின் ஆதரவின்றி வசிக்கும் தங்களுக்கு தொடர்ந்து முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் தலைமையில் குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ், நகர தலைவர் எஸ்.குமார் மற்றும் நிர்வாகிகள் 3 மனுக்கள் அளித்தனர். அதில், குடியாத்தம் புதுப்பேட்டையில் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த சாலையில் 108 ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு கூட போதுமான வழி இல்லை. எனவே அந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 60 வயது நிறைவடைந்த கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மாதம் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

நடவடிக்கை

வேலூரை அடுத்த சாத்துப்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அளித்த மனுவில், தங்களது வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அப்பகுதியில் வசிக்கும் சிலர் இடிக்க முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தனர். மனுவை பார்வையிட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவர்களிடம், கடந்த முறை நீங்கள் அளித்த மனுவின்பேரில் வேலூர் தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார். அதில், நீங்கள் புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி பொதுவழியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளீர்கள். அதனை நீங்களே இடிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்