முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரவீந்திரநாத் எம்.பி.
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக தேனி எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
பழநி,
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்பதாக தேனி எம்.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பழனி முருகன் கோவிலில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டத்தை துவக்கிவைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச லேப்-டாப், சைக்கிள் என்று பல சலுகைகளை வழங்கினார்" என்று ரவீந்திரநாத் கூறினார்.
இதனையடுத்து டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற டிடிவி தினகரன், சின்னம்மா என வரக்கூடிய அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து. அதுவே எனது கருத்தும். வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும்" என்று அதிமுக எம்.பி ரவீந்திரநாத் கூறினார்.