சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல் தொடங்கியது ஏராளமான பட்டதாரிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பட்டதாரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2022-12-15 19:56 GMT

சேலம், 

ரேஷன் கடை விற்பனையாளர்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர் மற்றும் 40 கட்டுனர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விற்பனையாளர்கள் பணியிடத்துக்கு 18 ஆயிரம் பேரும், கட்டுனர்கள் பணியிடத்துக்கு 3 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர்.

விற்பனையாளர் பணிக்கான நேர்காணல் நேற்று சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் தொடங்கியது. தினமும் 1,700 பேருக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இதற்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் 3 பேர் இடம்பெற்று விண்ணப்பத்தாரர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

பட்டதாரிகள் பங்கேற்பு

என்ஜினீயர்கள் மற்றும் ஏராளமான முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கல்வித்தகுதிக்கு ஏற்ப அவர்களிடம் பொது அறிவு மற்றும் கூட்டுறவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த நேர்காணல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் நேர்காணல் நடைபெறும் இடத்தில் தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி, செல்போன் பாதுகாப்பு அறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நேர்காணல் தேர்வு வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்