சரக்கு வேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி மற்றும் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் நேற்று கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அகரம் கூட்ரோடு அருகே வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ அளவிலான 30 மூட்டைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தின்னக்கழனி கிராமத்தை சேர்ந்த டிரைவர் முருகன் (37), பனந்தோப்பு குமார் என்கிற சந்தோஷ்குமார் (29) ஆகியோர் என்பதும், வேட்டியம்பட்டி, கிருஷ்ணகிரி, பனகமுட்லு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.