வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஊத்தங்கரை பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கிருஷ்ணகிரி அருகே வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-06 18:45 GMT

ஊத்தங்கரை பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கிருஷ்ணகிரி அருகே வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகராஜாகடை சாலையில் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி, பழையபேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து மகராஜாகடை செல்லும் வழியில் மேல்தெரு அருகே வந்த வேனை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் திருப்பி பழையபேட்டையில் இருந்து காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் செல்லும் சாலையில் சென்றார்.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதனால் சந்தேகம் அடைந்த அலுவலர்கள் வேனை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் வேனை சோதனை செய்தபோது 50 கிலோ அளவிலான 78 மூட்டைகளில் 3,900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக அலுவலர்கள் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் சிங்காரப்பேட்டையை சேர்ந்த மாதேஷ் (வயது 36) என்பதும், ஊத்தங்கரை பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அலுவலர்கள் ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேன் டிரைவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்