கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
7 டன் அரிசி பறிமுதல்
அதில் மூட்டை, மூட்டையாக 7 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை சேர்ந்த சிவக்குமார் (வயது 27), வெங்கடாஜலபதி (46) என தெரியவந்தது.
இந்த ரேஷன் அரிசியை வெளிமாநிலத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கன்டெய்னர் லாரி மற்றும் அதில் இருந்த 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி மற்றும் அரிசியை தர்மபுரி நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.