2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-30 18:45 GMT

2 டன் ரேஷன் அரிசி

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு 44 மூட்டைகளில் இருந்த 2,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் நாமக்கல் ராமாபுரம்புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது49), அண்ணாநகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலத்திற்கு கடத்த முயற்சி

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பேரும் நாமக்கல் நல்லிபாளையம், ராமாபுரம்புதூர் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைவான விலைக்கு வாங்கி, வடமாநிலத்திற்கு கடத்த முயற்சி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்