வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பென்னாகரத்தில் இருந்து பெங்களூருவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-10 16:46 GMT

பென்னாகரத்தில் இருந்து பெங்களூருவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் தர்மபுரி அருகே உள்ள சோகத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேன் டிரைவர் பென்னாகரத்தை சேர்ந்த வேலு (வயது 40), என்பதும், அதேபகுதியை சேர்ந்த மணி (31) என்பவர் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து டிரைவர் வேலு, மணி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதேபகுதியை சேர்ந்த அங்கமுத்து (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை போலீசார் நடத்திய சோதனையில் 79 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக லாரி, வேன், ஆட்டோ என மொத்தம் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்