சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து
மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.
தனியாருக்கு குத்தகை
மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.
சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.
வாகன தொழில் பாதிப்பு
ஊத்தங்கரையை சேர்ந்த கார் உரிமையாளரும், டிரைவருமான அண்ணாமலை:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார்களுக்கான வாடகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் கார்களுக்கு கூடுதலாக வாடகை கட்டணம் கேட்க வேண்டிய நிலை உள்ளது.
சுங்கச்சாவடிகளிலும் ஒரு முறை சென்றால் ஒரு கட்டணமும், அதே சுங்கச்சாவடியை 24 மணி நேரத்திற்குள் மீண்டும் திரும்ப வந்தால் மற்றொரு விதமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. வாடகைக்கு கார் வைத்து இயக்குபவர்கள் வாடிக்கையாளர்களிடம் கடந்த மாதம் ஒரு தொகையும், இந்த மாதம் கூடுதலாக தொகையும் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வால் வாடகைக்கு கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்து இயக்குபவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.
காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னசாமி:-
பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும், சுங்க கட்டணங்கள் உயரும் போதும் லாரி, சரக்கு வேன்களுக்கான வாடகை கட்டணம் சேர்ந்தே உயர்கின்றன. இவை உயரும் போது அனைத்து விதமான பொருட்களின் விலையும் உயர்ந்து விடுகின்றன. காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடுகின்றன.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். வாங்கும் சம்பளம் அதே நிலையில் தான் உள்ளது. அதே நேரத்தில் பொருட்களின் விலையோ மாதத்திற்கு மாதம் உயர்ந்து வருகிறது. சுங்கச்சாவடியில் 5 முதல் 10 ரூபாய் கட்டணம் உயர்த்துவதால் விலைவாசி அதிகமாக உயரும் என பொதுமக்கள் எண்ணுவார்கள். பெட்ரோல், டீசல் விலை தான் அனைத்து பொருட்களின் விலை உயர்வை தீர்மானிக்கிறது. அதே போல தான் சுங்கச்சாவடி கட்டண உயர்வும், வாகன போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் பாதிப்படைய செய்யும்.
சுங்கச்சாவடிகள் தேவையில்லை
ஊத்தங்கரையை சேர்ந்த மாநில மருந்து வணிகர் சங்க உறுப்பினர் திருநாவுக்கரசு:-
மும்பை, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் பொருட்கள், சரக்கு வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பல சுங்கச்சாவடிகளை கடந்து தான் நமது மாநிலத்திற்கு வருகின்றன. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தும் போது, தானாகவே லாரிகளின் வாடகை கட்டணங்களும் உயர்ந்து விடுகின்றன.
இதனால் பொருட்களுக்கான விலையும் உயர்கின்றன. இதன் காரணமாக கடந்த மாதத்தில் வாங்கிய அரிசி, பருப்பு முதல் அனைத்து பொருட்களின் விலையையும், வரும் நாட்களில் உள்ள விலையையும் ஒப்பிட்டால் அதிகமாகவே இருக்கும். சுங்கச்சாவடிகளே தேவையில்லை என்பது தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்தாகும். ஒவ்வொரு தனியார் சுங்கச்சாவடிகளுக்கும் பராமரிப்பிற்காக கொடுக்கப்படும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றால் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதுகள் கூட சரி செய்யப்படுவதில்லை. விபத்துக்குள்ளான வாகனங்கள் கூட விரைவில் அகற்றப்படுவதில்லை. எனவே சுங்கச்சாவடிகளே தேவையில்லை என்பதே எனது கருத்து.
பஸ் தொழில் பாதிப்பு
குந்தாரப்பள்ளியை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் வி.எம்.அன்பரசன்:-
சுங்க கட்டண உயர்வால் பஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நகரில் இருந்து மற்றொரு நகருக்கு இயக்குவதற்கு பெர்மிட் வாங்கி இயக்குகிறார்கள். இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து தான் பஸ்கள் செல்கின்றன. சுங்கச்சாவடியில் ஒரு முறைக்கு ஒரு கட்டணம், ஒரே நாளில் 2 முறை வந்தால் ஒரு கட்டணம், 50 முறை பயணிக்க ஒரு கட்டணம் என்று பல்வேறு வகையில் வசூலிக்கப்படுகிறது.
தற்போது ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பஸ் உரிமையாளர்களும், பஸ்களுக்கு கூடுதலாக மாதத்திற்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.
வாடகை கட்டணம் உயர்வு
ஓசூரை சேர்ந்த டூரிஸ்ட் கார் டிரைவர் சுரேஷ்:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு எங்களுக்கு கூடுதல் சுமையாகும். உதாரணமாக ஓசூரில் இருந்து நெல்லை செல்ல கிருஷ்ணகிரி, தொப்பூர், ஓமலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி என 9 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கு செல்வதற்கும், அங்கிருந்து திரும்ப வருவதற்கும் கணக்கிட்டு பார்த்தால், 200 முதல் 300 ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலவாகிறது.இதை வாடிக்கையாளர்களிடம் தான் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வண்டி வாடகை கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், இப்போது சுங்க கட்டண உயர்வால் மேலும் கூடுதல் வாடகை கட்டணம் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
ரெயில் போக்குவரத்து
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தை சேர்ந்த பிரியங்கா கூறியதாவது:-
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சிலிண்டர் விலை கிட்டத்தட்ட இருமடங்காகி விட்டது. சுங்க கட்டண உயர்வால் வெளி மாநிலங்களில இருந்து வரக்கூடிய அனைத்து விதமான உணவு பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. கார்கள் வைத்திருப்பவர்களும் நகர பகுதிகளுக்குள் காரை ஓட்டிக் கொள்ள வேண்டியது தான். தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டுமானால் பஸ் அல்லது ரெயில் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டியது தான்.