மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்டசிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் போக்சோவில் கைது
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாள்.
கடந்த 10-ந் தேதி வீட்டில் அந்த சிறுமி தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 60) என்ற முதியவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி சின்னசாமி வீட்டில் இருந்து அழுது கொண்டே வந்துள்ளார்.
முதியவர் கைது
இதனை பார்த்த சிறுமியின் தாய், அவளிடம் விசாரித்தார். அப்போது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் சின்னசாமியை கைது செய்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.