அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துடாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை
அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
பொறியியல் கல்லூரி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 7 இளநிலை பட்டப்படிப்புகளும், 3 முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொழில் மற்றும் ஆராய்ச்சித்துறை இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், தனித்தனி நூலகங்கள், பொதுவான மைய நூலகம் உள்ளன.
கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. கல்லூரியின் கணினி துறை, மின்னணுவியல் தொடர்பியல் துறை, மின், மின்னணுவியல் துறை ஆகியவற்றுக்கு ஆராய்ச்சி மையத்துக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. கல்லூரியில் குளிரூட்டப்பட்ட சிவந்தி கலையரங்கம், கருத்தரங்க அறைகள் போன்றவை நவீன வசதிகளுடன் உள்ளன.
மாணவிகள் சாதனை
அண்ணா பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழாவின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை (எம்.பி.ஏ.) மாணவிகள் ஜெ.அனுஷா 2-வது இடமும், வி.ரிவிதா 13-வது இடமும், எம்.இ. வி.எல்.எஸ்.ஐ. டிசைன் துறை மாணவி என்.அஸ்வினி 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி, மின்னணுவியல் தொடர்பியல் துறை தலைவர் பெனோ மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.