ஐகானிக் 2022 விருதுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் தேர்வு

எலைட் வேர்ல்டு ரெக்காட்ஸ் நிறுவனத்தின் ஐகானிக் விருதுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-13 17:41 GMT

எலைட் வேர்ல்டு ரெக்காட்ஸ் நிறுவனத்தின் ஐகானிக் விருதுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வு

கடந்த 27.5.2022 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 288 கிராம பஞ்சாயத்துகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளை உள்ளடக்கிய 2500 சதுர கிலோமீட்டர் விரிவுள்ள இடங்களில் பயணித்து 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகளை 3 மணி நேரத்தில் சேகரித்து சுத்தமான, சுகாதாரமான மாவட்டத்தினை உருவாக்கி உலக சாதனையை மாவட்ட நிர்வாகம் படைத்தது. இந்த பணியில் 96,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து 3.10.2022 அன்று ஒரே நாளில் 5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 288 பஞ்சாயத்துகளில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை 880 இடங்களில் நட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இப்பணியில் மாவட்டம் முழுவதும் 81 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த 2 சாதனைகளும் உலக சாதனை புரிந்தமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது. இயற்கை மற்றும் பசுமையைக் காக்கும் விதமாகவும், மனித சமுதாயத்தை உள்ளடக்கிய உலகின் அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பதாகவும், வருங்கால சந்ததிகளுக்கு பயனளிக்கும் படி மிகவும் உயர்ந்த நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளதை பாராட்டி எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரபி பால்பாக்கி, அட்ஜுடிகேட்டர் நவுரா ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்து கவுரவித்தனர்.

கலெக்டருக்கு அழைப்பு

அப்போது அவர்கள் கூறுகையில், மிக உயரிய நோக்கம் கொண்ட உலக சாதனைகளை உலகிற்கு அடையாளப்படுத்தி கவுரவிப்பதற்கு எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் கடமைப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு ஒருமுறை உலக அளவில் ஐகானிக் விருதுகள் வழங்குவதை எலைட் வேர்ல்டு் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மணி நேரத்தில் மிகப்பெரிய பிளாஸ்டிக் சேகரிப்பு இயக்கம் எனும் தலைப்பில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பிரிவில் ஐகானிக் 2022 விருதிற்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற 23-ம் ஆண்டின் மத்தியில் துபாய் நாட்டில் நடைபெறும் ஐகானிக் விருது விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி. எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார், செயற் பொறியாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்