ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை(திங்கட்கிழமை) பகல் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

Update: 2023-07-15 18:54 GMT

ராமேசுவரம்,

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை(திங்கட்கிழமை) பகல் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

ஆடி அமாவாசை

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

நடை திறந்திருக்கும்

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரோட்டம்

திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்