ராமேசுவரம் கோவில் நடை இன்று அடைப்பு

ராமர்பாதம் மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருள்வதை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை இன்று(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் முழுவதுமாக அடைக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை.

Update: 2023-07-28 18:45 GMT

ராமேசுவரம், 

ராமர்பாதம் மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருள்வதை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை இன்று(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் முழுவதுமாக அடைக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை.

திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாள் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி திருக்கல்யாணம் மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

இதனிடையே திருக்கல்யாண நிகழ்ச்சியின் 15-வது நாளில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏக சிம்மாசனத்தில் சாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மஞ்சள் நீராடல்

மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் யானை லட்சுமிக்கு தும்பிக்கை பகுதி முழுவதும் மஞ்சளால் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமியுடன் கோவில் ரதவீதியை சுற்றி வலம் வந்த யானை ராமலட்சுமியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், செல்போனிலும் புகைப்படம் எடுத்தனர்.

திருவிழாவில் கடைசி நாளான இன்று(சனிக்கிழமை) சாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கோவிலில் இருந்து கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கோவிலில் இருந்து சாமி, அம்பாள் காலை 6 மணிக்கு எழுந்தருளிய பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அதன்படி இன்று இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் பக்தர்கள் ஸ்படிகலிங்க தரிசனம் முதல் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்