ராமேசுவரம்,
ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர்மன்ற கூட்டம் நகர சபை தலைவர் நாசர்கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர சபை துணைத் தலைவர் பிச்சைதட்சிணாமூர்த்தி, ஆணையாளர் கண்ணன் மற்றும் 21 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமேசுவரம் பகுதியானது உலக புகழ் பெற்ற ஒரு புண்ணிய தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. ராமேசுவரத்தில் புகழ்பெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிநாடு, வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கோவிலின் ஆன்மிக வரலாறு தெரிந்து கொள்வதற்கும், சுற்றுலா இடங்களை கண்டு களிக்க உகந்த இடங்களையும் அவரவர் மொழிகளில் பேசி அவர்களின் மன நிறைவை ஏற்படுத்துகின்ற வகையில் கோவிலில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை கடந்த காலங்கள் முதல் தலைமுறை தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கான வரைமுறைகளை ஏற்படுத்தப்பட்டு 425 உறுப்பினர்கள் மட்டுமே இந்த பணியினை செய்து வருகிறார்கள். இதனை நிர்வாகம் செய்வதற்கும் நிர்வாகிகளை அவர்களுக்குள் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். எனவே யாத்திரை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலைத்துறை யாத்திரை பணியாளர்களை ஆன்மிக பணியினை கருத்தில் கொண்டும், அதற்கு ஆதரவளித்து அங்கீகாரம் வழங்கிடவும் இந்து சமய அறநிலைத்துறைக்கு பரிந்துரை செய்து நகர்மன்ற தலைவரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கவுன்சிலர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.