ரம்புட்டான் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை

கம்பம் பகுதியில் வரத்து அதிகரித்துள்ளதால் ரம்புட்டான் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.

Update: 2023-08-12 20:15 GMT

கேரள மாநிலத்தில் நிலவும் காலநிலை காரணமாக இங்கு பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. குறிப்பாக ரம்புட்டான், மங்குஸ்தான், கோகோ, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம் அதிகம் விளைகின்றன. இதில் ரம்புட்டான் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் பழமாக உள்ளது. தற்போது ரம்புட்டான் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி வந்து தேனி மாவட்ட பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கேரள மாநில வியாபாரி ஒருவர் கூறும்போது, ரம்புட்டான் பழம் மிருதுவான முட்களுடன், உருண்டை வடிவில் ரப்பர் பொம்மை போல் காணப்படும். இந்த பழத்தை விரல்களால் அழுத்தி உடைத்தால், உள்ளே வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிறத்துடன் நுங்கு போன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை சுவைக்கலாம்.

சிறிது புளிப்புடன் அதிக இனிப்பாக இருக்கும். ரம்புட்டான் பழங்கள் மரத்தில் காய்க்கின்றன. இந்த பழம் கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கம்பம் பகுதியில் வரத்து அதிகரித்துள்ளதால் ரம்புட்டான் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்