ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் தொடர்ந்து அகழாய்வு நடத்தப்படுமா? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அழகன்குளத்தில் அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படுமா? என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-14 19:35 GMT


அழகன்குளத்தில் அகழாய்வு தொடர்ந்து நடத்தப்படுமா? என்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அழகன்குளத்தில் அகழாய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாகும். சங்க காலங்களில் கடல் வழி வணிகத்துக்கு அழகன்குளம் கிராமம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இங்கு நடந்த அகழாய்வின் மூலம் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக பொருட்களும் கிடைத்திருக்கின்றன. எனவே இங்கு 1980-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வுகளின் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இந்த பொருட்களை கொண்டு அங்கு அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தொல்லியல் துறை அறிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தொல்லியல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை அகழாய்வில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கை தயார் செய்யப்பட்டு நிபுணர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒப்புதல் பெற்ற உடன் அழகன்குளம் அகழாய்வு இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இங்கு அருங்காட்சியகம் அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் கேள்வி

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அழகன்குளம் கிராமத்தில் தொடர்ந்து அகழாய்வு நடத்தப்படுமா? இல்லையா? என தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்