கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
d
தமிழகம் முழுவதும் கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தர்மபுரியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
காவிரி உபரிநீர்
தர்மபுரியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்களை பா.ம.க. முன்னெடுத்து வருகிறது. கடலிலே கலந்து வீணாகக்கூடிய தண்ணீரை தான் கேட்கிறோம். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 3 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செல்வதை இந்த திட்டம் தடுத்து விடும். தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக கல்வியில் தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திராவிட மாடல் ஆட்சியா?
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. சந்துக்கடைகளில் மது விற்பனை, கள்ள மது விற்பனை என படு பயங்கரமாக நடந்து வருகிறது, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலேயே குடிக்கு அடிமையான மாநிலமாக தமிழகம் உள்ளது, மது விலக்கு துறை அமைச்சர் மது விலக்கு அமைச்சராக இல்லை, மது திணிப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் அமைச்சராக இருக்கிறார்.
மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி பா.ம.க. தான். சாராயம் விற்பதில் தி.மு.க., அ.தி.மு.க. 2-ம் ஒரே நிலை தான். தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அரசு கூறியது. அந்த அறிவிப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை.
வருமானம் இல்லாத கடைகளை மட்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுவும் எப்போது என்று தெரியவில்லை. தமிழக முதல்-அமைச்சருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் அக்கறை இருந்தால் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அரசு வழங்க வேண்டும். சமூக நீதி என்று சொன்னால் மட்டும் போதாது. அதை அரசு நடைமுறைபடுத்த வேண்டும். இந்தியாவில் தமிழகத்திலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும் டாஸ்மாக் மது, கள்ளச்சாராயம் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் சந்துக்கடைகள் மற்றும் கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கள்ளத்தனமாக விற்கப்படும் மது எங்கிருந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியாமல் நேரடியாக விற்பனைக்கு வரும் அந்த மது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி செய்யும் ஆலைகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து உள்ளது.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.