ரமலான் வசூல் - என்.ஐ.ஏ, மாநில அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ரமலான் பண்டிகைக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-29 12:11 GMT

சென்னை,

ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ மற்றும் மாநில அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளுக்கு உதவுவதற்கு என்று கூறி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் இந்த பணம் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி, ஆவடி காவல் ஆணையருக்கு புகார் அளித்ததாகவும் இந்த சட்ட விரோத செயல்களில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார். இதை தடுப்பதற்கு அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கும் ஆவடி காவல் ஆணையருக்கும் உத்தரவிட வேண்டுமென்று அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கோர்ட்டில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இது தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் கூட தீவிரமான விஷயம். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மனுதாரர் கூறுவதுபோல நடந்தால் தடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று கூறி தேசிய புலனாய்வு முகமைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்