ராஜகோபால சாமி கோவிலில் ராமநவமி விழா
பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகோபாலசாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்து கரங்களையும், அந்தக் கரங்களில் சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம், ஆகிய ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது
ராமநவமி விழா
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் ராமநவமி விழா நடந்தது. இதில் ராஜகோபால பெருமாள் சாமி அருகில் ருக்மணி, சத்திய பாமா, சந்தான கோபாலகிருஷ்ணன், ராமர், லட்சுமணர், சீதை, திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர், மற்றும் சதுர் புஜ வீர ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள் தனி மண்டபத்தில் எழுந்தருளினர்.
அப்போது சாமிகளுக்கு பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசனம்
தொடநர்ந்து ராமர், லெட்சுமணன், சீதை ஆகிய சாமிகளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பத்ரி நாராயணன், செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.